search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிருந்தா காரத்"

    பொதுமக்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் மூலம் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி அரசையும் வீழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற தமிழ் பழ மொழியை நிறைவேற்ற வேண்டும் என பிருந்தா காரத் கூறியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தன்னை டீ கடை நடத்தியவர் என்றும், அடித்தட்டு மக்களின் நிலையை உணர்ந்தவர் என்றும் கூறுகிறார். கஜா புயலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு புதுக்கோட்டையில் டீ கடை நடத்தி வரும் சிவக்குமார், தனது வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் தான் உண்மையான டீ கடைக்காரர். டெல்லியில் அமர்ந்து இருப்பவர் மோசடி பேர் வழி.

    ரபேல் விவகாரத்தில் ஊழல் செய்து விட்டு ஆவணங்களை காணவில்லை என்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் குட்காவில் ஊழல் செய்து விட்டு ஆவணங்களை காணவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். 65 ஆண்டுகளாக லாபம் ஈட்டி வந்த பெல் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம்.

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள தேர்தல் மூலம் டெல்லியின் புதிய அரசையும், அதே நாளில் 18 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் புதிய அரசையும் உருவாக்கும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது. 2014 பாராளுமன்ற தேர்தலில் மோடியா? இந்த லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவை, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வினர் மறந்து விட்டு இன்று மோடியை டாடி என்று அழைக்கும் அளவுக்கு தாழ்ந்து விட்டனர்.

    5 ஆண்டு கால மோடி ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1.1.கோடி பேர் வேலை இழந்துள்ளனர். கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசு, இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடியை பாக்கி வைத்துள்ளது. மத்தியில் மதசார்பற்ற, ஊழலற்ற ஆட்சி அமைக்கத்தான் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    பொதுமக்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் மூலம் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி அரசையும் வீழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற தமிழ் பழ மொழியை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ரூ.12 லட்சம், புறநகர் மாவட்டம் சார்பில் ரூ.18 லட்சம், கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் சார்பில் தலா ரூ.1 லட்சம் பிருந்தா காரத்திடம் வழங்கப்பட்டது. #BrindaKarat
    துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற சமூக ஆர்வலர் மேதாபட்கர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் இன்று தூத்துக்குடி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம், அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அருணாஜெகதீசன் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் சமூக ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடி வருகிறார்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை அவர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது.

    இதையடுத்து தூத்துக்குடியில் பேரணி, பொதுக்கூட்டம் நட‌த்த அனுமதி அளிக்கவேண்டும் என்று அந்த கட்சி சார்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த கோர்ட்டு அனுமதியளித்தது. மேலும் கூட்டத்தை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து இன்று நடைபெறும் பொதுகூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். இதற்காக பிருந்தாகாரத் இன்று தூத்துக்குடி வருகிறார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்கள் குடும்பத்தினரை அவர் சந்தித்து பேசுகிறார்.

    ×